ஓசூர்: ஓசூரில், அகில பாரத ஹிந்து மகா சபா மாநில செயலாளர் கொலை வழக்கில், மூன்று பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், நேற்று ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள, ஜி.டி.எஸ்., நகரை சேர்ந்தவர் நாகராஜ், 45; அகில பாரத ஹிந்து மகா சபா மாநில செயலாளராக இருந்தார். ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த, 22ல் காலை, அனுமந்த் நகர் அருகே, நடந்து சென்ற போது, காரில் வந்த ஆறு பேர் கும்பல், அவரை ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொன்றது. ஹட்கோ போலீசார் விசாரணையில், ஓசூர் அனுமந்த் நகரை சேர்ந்த ரமேஷ், 40, என்பவருக்கு, 10 ஆயிரம் ரூபாயை, நாகராஜ் வட்டிக்கு வழங்கி உள்ளார். அதை திருப்பி தராததால் அவரையும், அவரது மகனையும், தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த ரமேஷ் தரப்பினர், நாகராஜை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக, ரமேஷ், 40, அவரது, 16 வயது மகன் மற்றும் பெங்களூருவை சேர்ந்த அருண்குமார், 27, ஆகிய மூன்று பேர், ஊத்தங்கரை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தனர். இந்நிலையில், ஓசூர், அனுமந்த் நகரை சேர்ந்த மணிவண்ணன், 46, என்பவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.