ஓசூர்: தர்மபுரி மாவட்டம், கடத்தூரை சேர்ந்தவர் பரந்தாமன், 47. லாரி டிரைவர்; இவர், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, சூளகிரி அடுத்த சாமல்பள்ளம் அருகே, சிமென்ட் லாரியை ஓட்டி சென்றார். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சென்டர் மீடியன் மீது மோதி, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றது. அப்போது அவ்வழியாக வந்த ஈச்சர் லாரி, சிமென்ட் லாரி மீது மோதியது. விபத்தில், சிமென்ட் லாரி கவிழ்ந்து, டிரைவர் பரந்தாமன் சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், திம்ஜேப்பள்ளி அருகேயுள்ள பெரனூரை சேர்ந்தவர் முனியப்பன், 65, விவசாயி; இவர் நேற்று காலை, 10:30 மணிக்கு, டி.வி.எஸ்., மொபட்டில் ராயக்கோட்டை நோக்கி சென்றார். திம்ஜேப்பள்ளி பிரிவு சாலையில், அவ்வழியாக வந்த பிக்கப் வாகனம், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனியப்பன், சம்பவ இடத்திலேயே பலியானார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.