புதுக்கோட்டை: ''உடல் உறுப்பு தானம் செய்வோரின் குடும்பத்தினருக்கு, அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவது குறித்து, பரீசிலனை செய்யப்பட்டு வருகிறது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் தொடர்ந்து, ஆறாவது முறையாக, இந்த ஆண்டும் முதல் இடம் பிடித்துள்ளது. இதற்கான மத்திய அரசின் விருதை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த விழாவில் வழங்கினார். விருது பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், நிருபர்களிடம் கூறியதாவது: உடல் உறுப்பு தானத்தில், தொடர்ந்து, ஆறாவது முறையாக, முதலிடத்திற்கான மத்திய அரசு விருது கிடைத்திருப்பது, மிகவும் பெருமைக்குரிய விஷயம். தமிழகத்தில், 1,392 கொடையாளர்களிடம் இருந்து, 8,245 உடல் உறுப்புகள், தானமாக பெற்று வழங்கப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தான அமைப்பில், இந்தியாவிலேயே தமிழகம், மிகவும் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானத்தை எளிதாக்கும் வகையில், கொடையாளர்கள், 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்யும் முறை, நடைமுறையில் உள்ளது. உடல் உறுப்புகளை கொண்டு செல்வதை எளிதாக்கும் வகையில், ஏர் ஆம்புலன்ஸ் சேவை, விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு பணி நியமனத்தின் போது, உடல் உறுப்பு கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து, பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.