கோபி: ''ஆன்லைனில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து, ஆலோசித்து வருகிறோம்,''என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபி தொகுதியில், 6.72 கோடி ரூபாய் மதிப்பில், வளர்ச்சி திட்டப்பணிகளை, நேற்று துவக்கி வைத்து, அமைச்சர் கூறியதாவது: மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது குறித்து, பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தால், பள்ளி திறப்பு குறித்து, முதல்வர் பரிசீலனை செய்வார். அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்தும் வாய்ப்புகள் இல்லை. இதுபோன்ற குற்றச்சாட்டு குறித்து, நேரடியாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போதைய கொரோனா சூழலில், அனைத்து வகுப்புக்கும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், இரு தேர்வுகளையும், ஆன்லைனில் நடத்தலாமா என, துறை ரீதியாக ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.