பனமரத்துப்பட்டி: திருமண விழாவுக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில், மணமகளின் தம்பி உள்பட, மூன்று பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர், தொட்டில்பட்டியை சேர்ந்த, திருப்பதி - ராஜலட்சுமியின் மகள் வான்மதிக்கு, மல்லூரில், நேற்று, திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்க, வான்மதியின் தம்பி ஜெகதீஷ்வரன், 27, அவரது நண்பர்கள் பார்த்தசாரதி, 20, கார்த்திகேயன், 20, ஆகியோர், 'பல்சர்' பைக்கில், மல்லூர் புறப்பட்டனர். பார்த்தசாரதி ஓட்டினார். சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, மல்லூர் அருகே, சந்தியூரில், நேற்று காலை, 1:30 மணிக்கு சென்றபோது, கரூரிலிருந்து, சேலம் நோக்கி வந்த அரசு பஸ் மீது, பைக் மோதியது. அதில், சம்பவ இடத்தில், பார்த்தசாரதி, கார்த்திகேயன் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஜெகதீஷ்வரனை, அப்பகுதி மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியில், அவரும் உயிரிழந்தார். இவர்கள் மூவரும், டிப்ளமோ முடித்துவிட்டு, வேலை தேடிவந்தனர். மல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர். அதேநேரம், விபத்து குறித்து, மணமக்களுக்கு தெரிவிக்காமல், உறவினர்கள், திருமணத்தை நடத்திவைத்தனர். பின், சம்பவம் குறித்து தெரிவித்தனர்.