புதுச்சேரி: சிக்கன நடவடிக்கை காரணமாக, அரசு டைரிகள் மற்றும் காலண்டர்கள் அச்சிடுவதில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
புதுச்சேரி அரசின் எழுது பொருட்கள் மற்றும் அச்சகத் துறையின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் டைரிகள், காலண்டர்கள் அச்சிடப்பட்டு இலவசமாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. அரசு டைரி, காலண்டர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது.
அரசு டைரியில் கவர்னர், முதல்வர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்கள், உயரதிகாரிகளின் மொபைல்போன் எண்கள், அலுவலக டெலிபோன் எண்கள் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள விபரங்கள் இடம் பெற்று இருக்கும்.
அதுபோல, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் உள்ள புராதன கட்டடங்கள், சுற்றுலா தலங்கள், பிரசித்திப் பெற்ற வழிபாட்டு தலங்கள் போன்றவற்றின் அழகிய படங்கள் அரசின் காலண்டர்களை அலங்கரிக்கும்.இதன் காரணமாக, அரசு டைரி, காலண்டர்களை பெற்று பயன்படுத்துவதற்காக பொதுமக்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.இந்நிலையில், வரும் 2021ம் ஆண்டுக்கான டைரிகள், காலண்டர்களை ரூ.1 கோடியே 14 லட்சம் செலவில் அச்சிடுவதற்கு கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.
சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுமாறும், தேவையற்ற செலவுகளை குறைக்குமாறும் மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.இதன் காரணமாக, கோப்புக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை; மத்திய உள்துறையின் பரிசீலனைக்கு கோப்பை அனுப்பி வைத்துள்ளார். இதனால், வரும் 2021ம் ஆண்டுக்கான டைரி, காலண்டர்கள் அச் சிடும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.