பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் தொடர் மழையால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பள்ளிபாளையம் பகுதியில், விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் கிணற்று தண்ணீர், ஆழ்துளை கிணற்றை பயன்படுத்தி சாகுபடியில் ஈடுபடுவர். கடந்த கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, தண்ணீர் மிகவும் குறைந்து விட்டது. பல கிணறுகள், போர்வெல்கள் வறண்டு விட்டன. மீண்டும் மழை பெய்தால், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என்பதால், மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். வடகிழக்கு பருவமழை சில நாட்கள் பெய்ததால், கிணறுகளில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால், நிலத்தடி நீர் மட்டம் வேகமாக அதிகரித்து, பல கிணறுகள் முழுமையாக நிரம்பியுள்ளன.