நாமக்கல்: அரச மரம் வேர்களின் வளர்ச்சியால் அரசு மருத்துவமனை அருகே, வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தினமும், 500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 300க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர் டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் என, 100க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். மருத்துவமனை கழிவு நீரானது, குழாய் மூலம் மோகனூர் சாலையில் செல்லும் சாக்கடை வடிகாலில் இணைக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் அந்த வடிகாலில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்து துர்நாற்றத்துடன், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. நேற்று, மீண்டும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற முடியாமல் இருந்தது. தூய்மை பணியாளர்கள், அந்த கான்கிரீட் சிலாப்பை அகற்றி பார்த்தனர். அங்குள்ள பயணிகள் நிழற்கூடம் அருகே உள்ள அரச மரத்தின் வேர்கள் பரவி, வடிகாலை அடைத்து வருவது கண்டறியப்பட்டது. இதனால் அடிக்கடி தூர்வாரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனை முன் சாக்கடை தரைப்பாலம் அமைத்தால் கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல வாய்ப்பு ஏற்படும்.