கரூர்: கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், மழை காரணமாக, ஆத்துப்பாளையம் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.
மேட்டூர் அணை, அமராவதி அணை, பவானி சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், நொய்யல் ஆற்றின் தண்ணீர் மாயனூர் கதவணைக்கு செல்கிறது. கடந்த ஜூன், 12 முதல் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர், அமராவதி, நொய்யல் ஆற்றில் தண்ணீர் வந்ததால், கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு அதிகபட்சமாக, வினாடிக்கு, 22 கன அடி தண்ணீர் வரை வந்தது. இந்நிலையில், மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து தற்போது, 500 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. அமராவதி அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பவானி சாகர் அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றிலும் குறைந்தளவே தண்ணீர் வருவதால், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. நேற்று காலை, 1,556 கன அடியாக குறைந்தது. இதனால், காவிரியாற்றில், 1,206 கன அடியும், மூன்று கிளை வாய்க்காலில், 350 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
* அமராவதி அணைக்கு, நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 323 கன அடி தண்ணீர் வந்தது. ஆறு மற்றும் புதிய வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 76.51 அடியாக இருந்தது.
* கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 22 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 20.17 அடியாக இருந்தது. இன்னும் ஒரு சில நாட்களில், மழை காரணமாக அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், நொய்யல் வாய்க்காலில், நடப்பாண்டு இரண்டாவது முறையாக தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.