கரூர்: கரூர் அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டியின் அடிப்பாகத்தின் தூண்கள், சேதமடைந்துள்ளன. எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள, மேல்நிலை தொட்டியை சீரமைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த, 2011ல் சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்து, கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. பிறகு, தொழிற்பேட்டை சாலை சணப்பிரட்டியில், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதில், காவிரி குடிநீர் ஏற்றப்பட்டு, சணப் பிரட்டி, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, குடிநீர் தொட்டியின் கீழ் பகுதியில் உள்ள சிமென்ட் தூண்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும்அளவுக்கு உள்ளது. அதை சீரமைக்காத பட்சத்தில், குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. அப்போது, 500க்கும் மேற்பட்ட வீடுகள், 50க்கும் மேற்பட்ட பொது குழாய்களுக்கு தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படும். எனவே, மேல்நிலை குடிநீர் தொட்டியின் கீழ்பகுதியில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்ய கரூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.