ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் மீன்வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ள போதும், கார்த்திகை என்பதால் எதிர்பார்த்த விற்பனை இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால், மூக்கையூர், வாலிநோக்கம் உள்ளிட்ட இடங்களில் புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மீன்பிடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய நாட்டு படகுகளில் மட்டும் ஒருசிலர் கரையோரங்களில் மீன்பிடிக்கின்றனர். இதன்காரணமாக மீன்கள் வரத்து குறைந்து ஒரு கிலோவிற்கு ரூ. 20 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது.அதேசமயம் மார்க்கெட்டில் எதிர்பார்த்த விற்பனை இல்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் மீன்வியாபாரி சதக்கத்துல்லா கூறுகையில், 'மூக்கையூர், வாலிநோக்கம், குந்துகால், தொண்டி பகுதியில்நாட்டுபடகுகளில் கரையோரத்தில் மீன்பிடிக்கின்றனர். அவற்றை மொத்தவிலைக்கு வாங்கிவந்து மார்க்கெட்டில் வியாபாரம் செய்கிறோம். நண்டு கிலோ ரூ.250 நகர ரூ.300, பாறை ரூ.350, உலா ரூ.300 என விற்கிறோம். தற்போது கார்த்திகை என்பதால் விற்பனை மிகவும் குறைவாக நடக்கிறது. 150 முதல் 200 கிலோ வரை விற்ற இடத்தில் தற்போது 50 கிலோ விற்பதே சிரமமாக உள்ளது. கூடுதல் விலை கொடுத்து மீன் வாங்கி வந்தாலும் விற்பனையின்றி வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளோம்,' என்றார்.----