பூந்தமல்லி : பூந்தமல்லியில், மனைவியை கொலை செய்து, தலைமறைவாக இருந்தவரை, போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி, ரைட்டர் தெருவைச் சேர்ந்தவர் நுாருதீன், 52; பெட்ரோல் 'பங்க்' ஊழியர். இவரது மனைவி அசினா பேகம், 42. இவர்களுக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி, கணவருடன், அதே பகுதியில்வசித்து வருகிறார்.கடந்த, 19ம் தேதி, மகன் அல்டாப் வேலைக்கு சென்ற பின், தாய் அசினா பேகத்தின் மொபைலின் தொடர்பு கொண்டார்.அப்போது, மொபைல், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தாய் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தந்தை நுாருதீன் தலைமறைவானார். இது குறித்து, அவர் அளித்த புகாரின்படி, பூந்தமல்லி போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த நுாருதீனை, நேற்று முன்தினம், போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், மனைவிக்கு, வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி, நுாருதீன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும், வேலைக்கு செல்லும்போது, வீட்டை பூட்டி செல்வதும், பின், அடிக்கடி வீட்டிற்கு வந்து, சோதனை செய்வதுமாக இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று, கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த நுாருதீன், அசினா பேகத்தை சரமாரியாக தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மனைவியின் மொபைல் போனை எடுத்து சென்றால், போலீசார் கண்டுபிடித்து விடுவர் என்பதால், வீட்டிலேயே வைத்து, மாயமானது தெரிய வந்தது. நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.