சென்னை : 'தொழில் அதிபர்கள் போல நடித்து, 3.86 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தோம்' என, கைதாகியுள்ள, வங்கி மோசடி கும்பலைச் சேர்ந்தவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை, வேளச்சேரி, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையின் மேலாளர் தில்லை கோவிந்தன். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்து உள்ள புகார்:சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த, முகமது முசாமில், அய்யாதுரை மற்றும் கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த, பாலவிஜய், 35 ஆகியோர், எங்கள் வங்கி கிளையில், வருமான வரித்துறையின் ஆவணங்களை போலியாக தாக்கல் செய்து, கார் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, நேற்று முன்தினம், முகமது முசாமில், 34, பாலவிஜய், 35, அய்யாதுரை, 32, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து, இவர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.போலீசாரிடம் முகமது முசாமில் அளித்துள்ள வாக்குமூலம்:இடைத்தரர்கள் வாயிலாக, நுங்கம்பாக்கம் பேங்க் ஆப் இந்தியா; எழும்பூர் விஜயா வங்கி; திருவான்மியூர் மற்றும் வேளச்சேரி பஞ்சாப் நேஷனல் வங்கி; அடையாறு யுகோ வங்கி; ஆழ்வார்பேட்டை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர்களை அணுகினோம்.
இவர்களிடம், நானும் என் கூட்டாளிகளும், சரளமாக ஆங்கிலத்தில் பேசி, தொழில் அதிபர்கள் போல நடித்தோம்.நம்ப வைக்க, நீலாங்கரை, பனையூர், முட்டுக்காடு உள்ளிட்ட இடங்களில், சொகுசு பங்களாவில் வாடகைக்கு தங்குவோம். அங்கு, ஆடி, பி.எம்.டயுள்யூ கார்களை நிறுத்துவோம்.இந்த இடங்களுக்கு வங்கி மேலாளர்களை வரவழைத்தோம். இவர்களும் தொழில் அதிபர்கள் என, நம்பிவிட்டனர். மேற்கண்ட வங்கிகளில், போலி வருமான வரித்துறை ஆவணங்களை தாக்கல் செய்து, 3.86 கோடி ரூபாய்க்கு, கார் கடன் வாங்கி மோசடி செய்தோம். இவ்வாறு, அவர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.