சென்னை, : நாட்டில் முதல் முறையாக, மனிதநேயம் அறக்கட்டளை சார்பில், யு.பி.எஸ்.சி., மற்றும் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், பொதிகை 'டிவி'யில் ஒளிபரப்பப்பட உள்ளது.
இது குறித்து, மனிதநேயம் அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி கூறியதாவது: சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, விளிப்பு நிலை மாணவ - மாணவியருக்கு உதவ, 2005ம் ஆண்டு, மனிதநேயம் அறக்கட்டளை துவங்கப்பட்டது.கடந்த, 14 ஆண்டுகளில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., மற்றும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து, 3,534 மாணவ - மாணவியரை, வெற்றி பெற செய்துள்ளோம். இவர்கள், நாட்டில், பல்வேறு அரசு பதவிகளில் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள, 259 ஜாதி பிரிவுகளில், 169 பிரிவுகளைச் சேர்ந்த, மாணவ - மாணவியரை வெற்றியாளர்களாக உருவாக்கி, அரசு பணியில் அமர வைத்துள்ளோம்.மொத்தமுள்ள, 259 ஜாதி பிரிவு மாணவ - மாணவியரை, உயர் பதவியில் அமர வைப்பது தான், முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம்.இதற்காக, மாவட்டம்தோறும் நுழைவுத் தேர்வு நடத்தி, இலவச பயிற்சி மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்குகிறோம்.இதன் தொடர்ச்சியாக, நாட்டில் முதல் முறையாக, துார்தர்ஷன் பொதிகை 'டிவி' வழியாக, 'டிவி வழி ஐ.ஏ.எஸ்., பயிற்சி' என்ற தலைப்பில், இலவச கல்வி ஒளிபரப்பு செய்ய உள்ளோம்.
இந்நிகழ்ச்சி, டிச., 3ம் தேதி முதல், தினமும் காலை, 10:00 முதல் 11:00 மணி வரை, ஒளிபரப்பாகும். இதை, நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் படித்து பயன் பெற முடியும்.மேலும், விபரங்களுக்கு, www.mntfreeias.com என்ற இணையதளத்தில், பெயர், முகவரி பதிவு செய்து கொள்ளவும்.இவ்வாறு, அவர் கூறினார்.