தன்னலமற்ற சேவைகளே என் அடையாளம்! | சென்னை செய்திகள் | Dinamalar
தன்னலமற்ற சேவைகளே என் அடையாளம்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 நவ
2020
00:46

சமூக நிறுவனங்களும், தொண்டு அமைப்புகளும் தான், சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என இல்லாமல், தனியாளாக, தன்னால் ஆன தொண்டு களை செய்து வரும், கரூர், சி.எஸ்.ஐ., அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டினா:
அம்மா, அப்பா இருவரும், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள். என்னையும் சேர்த்து, வீட்டில், ஆறு குழந்தைகள். துவக்கத்தில் ஆசிரியையாக பணியில் சேர்ந்த காலத்தில், நிர்வாக காரணங்களால், பல மாதங்களுக்கு சம்பளம் வரவில்லை. கரூரில் இருந்து மணப்பாறைக்கு, தனியார் பஸ்சில் பயணம் செய்வேன். டிக்கெட் எடுக்கக் கூட பணம் இருக்காது. தினமும், அதே வழியில் சென்று வருவதால், தனியார் பஸ் கண்டக்டர்கள் சிலர், என்னிடம் பணம் கேட்பதே இல்லை; டிக்கெட் கொடுத்து விடுவர்.பணம் கொடுக்காமல், எத்தனை முறை பயணம் செய்துள்ளேன் என்பதை குறித்து வைத்திருந்து, பணம் கிடைத்ததும் , மொத்தமாக கொடுத்துள்ளேன். அந்த சம்பவம் தான், சமூக சேவையிலும், பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது.கடந்த, ௨௦௦௪ல், இந்தப் பள்ளிக்கு ஆசிரியராக வந்த போது, எச்.ஐ.வி., பாதித்த பெற்றோரின், ௧௩ குழந்தைகளை, எந்த பள்ளிகளிலும் சேர்க்காமல் விரட்டி அடித்தனர். அதை அறிந்த நான், அந்த பிள்ளைகளை தேடிப்பிடித்து, பள்ளியில் சேர்த்து, கல்வி கற்றுக் கொடுத்தேன். மேலும், நடக்க முடியாத, மன வளர்ச்சி இல்லாத, ௧௪ குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, பாடம் கற்றுக் கொடுத்து வருகிறேன். இந்த பகுதியில், நாடோடி இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். படிப்பறிவு இல்லாத அந்த இனத்து பெற்றோரிடம் பேசி, குழந்தைகளை அழைத்து வந்து, பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன். அந்தக் குழந்தைகள், தலையைக் கூட வாராமல் அப்படியே பள்ளிக்கு வருவர். அவர்களுக்கு தலையில் எண்ணெய் தேய்த்து, தலைவாரி விடுவேன். சில குழந்தைகளுக்கு, மாலையில், முடி வெட்டி விட்டு உள்ளேன். இதற்காக, சலுான் கடைகளில் இருக்கும் பொருட்களை, பள்ளியில் வாங்கி வைத்துள்ளேன். தேவைப்படும் குழந்தைகளுக்கு அவற்றை பயன்படுத்தி, முடி வெட்டி விடுகிறேன்.ஒரு நாள் மாணவன் ஒருவன், காலையில் சாப்பிடாமல் வந்து, பள்ளியில் மயங்கி விழுந்து விட்டான். அதை அறிந்த நான், காலை டிபன் சாப்பிட முடியாத மாணவர்களுக்கு, என் சொந்த செலவில், டிபன் வாங்கிக் கொடுக்கிறேன். இப்படி, தன்னலம் கருதாத சேவைகளை செய்வதால், தமிழக அரசு எனக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கியுள்ளது. இதுபோன்ற சேவைகளை செய்வதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக, திருமணமும் செய்து கொள்ளவில்லை!

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X