ராமேஸ்வரம்:கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதிகள் ஊடுருவல் ஆகியவற்றை தடுக்க தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
துாத்துக்குடி அருகே கடல் மார்க்கமாக பாக்., இருந்து இலங்கைக்கு கடத்திய ரூ.500 கோடி ஹெராயின், 5 கைத்துப்பாக்கியை நவ.,25ல் இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.மத்திய, மாநில உளவுத்துறை விசாரணையில், கடல் மார்க்கமாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுகிறது.
பாக்., கராச்சியில் இருந்து மீன்பிடி படகில் வந்து போதைபொருளை இலங்கை படகில் உள்ளவர்களிடம் ஒப்படைத்ததும், இதில் சர்வதேச போதை கடத்தல் கும்பலும் பாக்., பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இலங்கை, தனுஷ்கோடி இடையே ஹெராயின் கடத்தல் கும்பல், பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடல், ராமேஸ்வரம் பாக்ஜலசந்தி கடலில் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹோவர்கிராப்ட் கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி எல்லைக்குள் அன்னிய படகுகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் அதிநவீன ரேடார் மூலம் கண்காணிக்கின்றனர்.-