மதுரை: ''சென்னையிலிருந்து துாத்துக்குடிக்கு திரவ இயற்கை எரிவாயு குழாய் மூலம் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் பணியை ஐ.ஓ.சி., மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு குழாய் வழியாக திரவ இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படும்'' என மதுரையில் அதன் துணை பொது மேலாளர் சீனிவாஸ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பெட்ரோலிய பொருட்களை குழாய் வழியாக கொண்டு செல்வதால் நேரம், போக்குவரத்து செலவு, மழை போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் தடை தவிர்க்கப்படுகிறது. நாட்டில் 1960ல் இருந்து குழாய் வழியாக பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழகத்தில் 2005 முதல் கொண்டு செல்லப்படுகிறது. சென்னை மணலியில் இருந்து கப்பலுாருக்கு பெட்ரோலிய பொருட்கள் குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது.தற்போது சென்னையிலிருந்து துாத்துக்குடிக்கு திரவ இயற்கை எரிவாயு குழாய் மூலம் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் பணியை ஐ.ஓ.சி., மேற்கொண்டு வருகிறது.இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு குழாய் வழியாக திரவ இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படும். மணலியிலிருந்து கப்பலுாருக்கு செல்லும் குழாய் அருகில் இதற்கான குழாய் அமைக்கப்படுகிறது.மதுரை மாவட்டத்தில் மேலுார், கிழக்கு ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட கம்பூர், தொந்திலிங்கபுரம் உள்ளிட்ட 25 கிராமங்கள் வழியாக குழாய் அமைக்கப்படுகிறது. இதற்காக நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படுவதில்லை. குழாய் அமையும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு தற்போது கூடுதலாக 20 சதவீத இழப்பீடு, பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்கப்படுகிறது. குழாய் அமைத்த பின் விவசாய பணிகளை மேற்கொள்ளலாம். இப்பணிகள் 2021க்குள் முடிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றார். திட்ட அலுவலர் அஜித்குமார், துணை கலெக்டர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.