பயணியர் எண்ணிக்கை குறைவால், டிசம்பர் முதல், சென்னை - கோவை சதாப்தி ரயிலை நிறுத்துவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பயணியர், தொழில், வர்த்தக நிறுவனத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 'ரயில் ரத்து செய்யப்பட்டால், உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன்' என, சேலம், தி.மு.க.,-எம்.பி., பார்த்திபன் எச்சரித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி ரயில், செவ்வாய் தவிர்த்து, மற்ற நாள் இயக்கப்படுகிறது. இதனால், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிகர், தொழில் நிறுவனத்தினர், சென்னை செல்ல, திரும்ப, பயன்படுத்தினர். வரும் டிசம்பர் முதல், இந்த ரயில் நிறுத்தப்படுவதால், அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளரிடம், கோவை எம்.பி., நடராஜன், சேலம் எம்.பி., பார்த்திபன் உள்ளிட்டோர், மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து, சேலம் வணிகர்கள் கூறியதாவது: ஏற்கனவே, ரயில்கள் பற்றாக்குறையாக இருந்தும், தற்போது, சதாப்தி ரயில் ரத்து செய்யப்படுவது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. வருவாயை மட்டும் கணக்கிடாமல், சேவை நோக்கில் பயணியருக்கு ரயில் இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேலம் எம்.பி., பார்த்திபன்: ரயில்வே சேர்மன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பேசினேன். ரயில்வே கோட்ட மேலாளரிடம், நேரில் வலியுறுத்தினேன். கொரோனா சூழலில், தற்காலிகமாக ரயில் நிறுத்தப்
படுவதாக தெரிவித்தனர். இருந்தபோதும், மக்களுக்கு பொதுத்துறை நிறுவனம், சேவைக்கு இயக்க வலியுறுத்தியுள்ளேன். பரிசீலிப்பதாக உறுதியளித்தனர். தொழில்துறை, இப்போதுதான் மெல்ல மீண்டு வருகிறது. இதுபோன்று, ரயில்கள் ரத்து செய்யப்பட்டால், தொழில் துறையில் பின்னடைவு ஏற்படும். அதனால், ரயில் ரத்து செய்யப்பட்டால், ரயில்வே அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன்.
ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி: கொரோனாவுக்கான ஊரடங்கு நிலையில், பொதுமக்களுக்கு இந்த ரயில்வே பயனுடையதாக உள்ளது. பெரும்பாலான ரயில்கள் இயங்காத நிலையில், இந்த ரயிலை மக்கள் பயன்படுத்தினர். குறிப்பிட்ட நேரத்தில் ரயில் இயக்கப்பட்டதால் கூட, கூட்டம் குறைவாக இருந்திருக்கலாம். ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து, பயணிகள் வசதிக்கான நேரத்தை மாற்றி இயக்க வேண்டும். அதை விடுத்து, ரயில் இயக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்வதால், பயணிகள் பாதிக்கப்படுவர். இதுபற்றி, ரயில்வே துறை அமைச்சருக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் அனுப்பி, பேசி உள்ளேன். இந்த ரயிலை நிறுத்தாமல், தொடர்ந்து இயக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
நாமக்கல் எம்.பி., சின்ராஜ்: மக்கள் பயன்பாடு குறைந்துள்ளது என்று காரணம் காட்டி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படும் என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த, ஆறு மாதங்களுக்கு மேல், கொரோனா பாதிப்பில் இருந்த மக்கள், தற்போதுதான், தங்களுடைய அன்றாட பணிகளை மேற்கொள்ள துவங்கி உள்ளனர். கொங்கு மண்டலத்தில் இருந்து, தினமும், தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு, பெரும்பாலான மக்கள் சென்று வருகின்றனர். அதனால், ரயில்வேயின் இந்த முடிவை திரும்பபெறுவதுடன், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை, தொடர்ந்து இயக்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய ரயில்வே அமைச்சருக்கும், சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.
- நமது சிறப்பு நிருபர் -