காஞ்சிபுரம் : திருக்காலிமேட்டில், மழை நீர் கால்வாயை, காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள், துார் வாரியபோது சாய்ந்த மின்கம்பங்களை, மின் வாரிய ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர்.
'நிவர் 'புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரம் நகராட்சி சார்பில், திருக்காலி மேட்டில் இருந்து, திருவீதிபள்ளம் நகராட்சி குப்பை கிடக்குக்கு செல்லும் சாலையோரம் உள்ள கால்வாய், கடந்த வாரம், ஜே.சி.பி., மூலம் துார் வாரப்பட்டது.அப்போது, வீடுகளுக்கு மின் இணைப்பு செல்லும் மூன்று மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. கம்பம் சாய்ந்ததை அறிந்த நகராட்சி ஊழியர்கள், அதை மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்காமல், சத்தமின்றி அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, 'நிவர்' புயலால், கடந்த, 25ல், காற்றுடன் பலத்த மழை பெய்த போது, சாய்ந்த மின்கம்பத்தில் உள்ள மின் ஒயர்கள் உராய்வு ஏற்பட்டு, அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, சிவகாஞ்சி பிரிவு மின் ஊழியர்கள், மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்ட வீடுகளுக்கு, தற்காலிகமாக மாற்று வழியில் மின் இணைப்பு வழங்கினர். தற்போது, சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்களை சீரமைத்து வருகின்றனர்.கால்வாய் ஓரம் மின் கம்பம் இருந்தும், காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள் அலட்சியமாக கால்வாயை துார்வாரியதால்தான், மின் கம்பம் சாய்ந்துள்ளது என, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.