ஸ்ரீபெரும்புதுார் : கம்ப கால்வாய் வழியே, பாலாறு நீர், ஸ்ரீபெரும்புதுார் எல்லையை வந்தடைந்தது.
ராணிபேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியை கடக்கும் பாலாற்றில் அணைக்கட்டு உள்ளது. இங்கிருந்து துவங்கும், கம்ப கால்வாய், காஞ்சிபுரம் மாவட்டம், தைப்பாக்கம் வழியே, 43 கி.மீ., பயணித்து, ஸ்ரீபெரும்புதுார் ஏரியில் முடிகிறது.'கம்ப கால்வாய்''கம்ப வர்மன்' என்ற பல்லவ மன்னனால், இந்த கால்வாய் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான், இந்த கால்வாயை, 'கம்ப கால்வாய்' என, அழைக்கின்றனர். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலும், இந்த கால்வாய் துார்வாரி பராமரிக்கப்பட்டுள்ளது.
கம்ப கால்வாயால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 85 ஏரிகள் நீர் வரத்து பெறுகின்றன. இதில், ஸ்ரீபெரும்புதுார் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 30 ஏரிகள் அடங்கும். இந்நிலையில், பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக, கம்ப கால்வாயில் நீர்வரத்து துவங்கியுள்ளது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் கம்ப கால்வாய் துவங்கும் இடமான ஏகனா புரம் கிராமத்தில் உள்ள கடப்பான்தாங்கள் பகுதிக்கு, நேற்று முன்தினம் மாலை, பாலாறு நீர் வர துவங்கியது.மலர் துாவிஅப்போது, விவசாயிகள் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வைத்து கற்பூரம் ஏற்றி, மலர் துாவி வணங்கி பாலாற்று நீரை வரவேற்றனர்.
எனினும், ராணிபேட்டை அருகே, பணப்பாக்கம் கிராமத்தில், கம்ப கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குறைவான அளவு பாலாற்று நீரே தற்போது வருகிறது.ஏரிக்கு பாலாற்று நீர்கம்ப கால்வாயில் வரும் பாலாற்று நீர் கடைசியாக, ஸ்ரீபெரும்புதுார் ஏரியில் சேகரமாகிறது. பின், ஸ்ரீபெரும்புதுார் ஏரியில் இருந்து, வெளியேறும் உபரி நீர், அனைத்தும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும். ஏற்கனவே, தற்போது கன மழையால், ஸ்ரீபெரும்புதுார் ஏரியில், உபரி நீர் வெளியேறுகிறது. இந்நிலையில், கம்ப கால்வாயில், பாலாற்று நீர் அதிக அளவு வந்தால், இந்த நீர் அனைத்தும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.