கடலுார் : கடலுார் மாவட்டத்தில் உழவர் - அலுவலர் தொடர்புத் திட்டத்தில் முன்னோடி விவசாயிகளுக்கு நவீன வேளாண் சாகுபடிதொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை வழங்கும் பணி துவங்கியுள்ளது.
தமிழக அரசு உழவர்களுக்கும், விரிவாக்க அலுவலர்களுக்குமான தொடர்பை வலுப்படுத்தும் விதமாக உழவர் - அலுவலர் தொடர்பு திட்டத்தை மாநிலம் முழுவதும் கடந்த 23ம் தேதி புதிதாக துவங்கியுள்ளது.இத்திட்டத்தில் நவீன வேளாண் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் உழவர் நலன் காக்கும் மானியத் திட்டங்களை வேளாண்துறை அதிகாரிகள் விளைநிலங்களுக்கே சென்று விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்குவார்கள்.பயிற்சி பெற்ற முன்னோடி விவசாயிகள், மற்ற விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுத் தருவார்கள்.
இத்திட்டத்தில் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் குறைந்த பட்சம் 10 முன்னோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசின் மானியத் திட்டங்கள் குறித்த விளக்கங்களும் பயிற்சிகளும் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. கடலுார் மாவட்டத்தில் 683 கிராம பஞ்சாயத்துகளில் தலா 10 பேர் என மொத்தம் 6830 முன்னோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேளாண்துறை அதிகாரிகள் விளைநிலங்களுக்கே சென்று சந்தித்து ஆலோசனை வழங்கும் பணி 13 ஊராட்சிகளில் துவங்கி நடந்து வருகிறது.
வேளாண் அலுவலர்கள் கிராம ஊராட்சிகளுக்கு செல்வதையும், முன்னோடி விவசாயிகளுக்கு வேளாண் தகவல் பரிமாறப்படுவதையும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனரின் தலைமையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானி, வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டு வட்டார அளவில் 'வட்டார வேளாண்மை விரிவாக்க குழு' அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது மாவட்ட வேளாண்மை இணை இயக்குனரை கலந்தாலோசித்து பயிர் சாகுபடி நிலவரம் குறித்த தகவல்களை அவ்வப்போது சேகரித்து அதற்கேற்ப விவசாயிகளுக்கான மாதாந்திர தொழில்நுட்பங்கள் குறித்த கையேடு தயாரித்து வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளது.