விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் பெய்த பலத்த மழையால், 9,880.35 எக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் வழியே ஓடும் தென்பெண்ணை, சங்கராபரணி ஆகிய நதிகளும், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 506 ஏரிகள், மாவட்ட விவசாயத்தின் நீர் ஆதாரமாக உள்ளது. இந்த மாவட்டத்தின் மேற்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் தென்பெண்ணை ஆறுகளில் பெருக்கெடுத்து வந்து, உபரி நீர் ஏரிகளில் நிரம்பும்.மாவட்டத்தின் இயல்பான மழையளவு 1,060 மி.மீ., ஆகும். இதில், தென்மேற்கு பருவமழை 356.66 மி.மீ., மற்றும் வடகிழக்கு பருவமழை 638 மி.மீ., என ஆண்டின் சராசரி மழை அளவாக உள்ளது.
கடந்த தென்மேற்கு பருவமழை மாவட்டத்தில் 320.49 மி.மீ., பெய்தது. இதேபோன்று, வடகிழக்கு பருவமழையானது, விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மாதம் தாமதமாக துவங்கி பெய்து வருகின்றது. இந்நிலையில், நிவர் புயலால் கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 506 ஏரிகளில், 62 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளவு நிரம்பியது.மேலும், நிவர் புயல் பலத்த மழையால், மாவட்டத்தில் பயிர்கள் மற்றும் மரங்கள் ஆகியவை விழுந்து சேதமடைந்தது. அதன்படி, மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட சேதம் தொடர்பான புள்ளி விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில், ஒரு மனித உயிரிழப்பு, 1,024 வீடுகள் சேதம், 71 கால்நடைகள் இறப்பு, 2,047 கோழிகள் இறப்பு மற்றும் 520 மரங்கள் விழுந்துள்ளது. மேலும், விவசாய பயிர்களில் 4008 எக்டேர் நெல், 3,748 எக்டேர் உளுந்து, 448 எக்டேர் கடலை பயிர், 67 எக்டேர் கரும்பு, 650.05 எக்டேர் தோட்டக்கலை பயிர், 1,026.3 எக்டேர் ஆரம்பகட்ட பாதிக்கப்பட்ட பயிர்கள் என மொத்தம் 9,880.35 எக்டேர் பரப்பில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.இதேபோன்று, 532 மின்கம்பங்கள், 54 டிரான்ஸ்பார்மர், 33 மின்கம்பிகள் சேதமடைந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் 587 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, 10,146 குடும்பங்களை சேர்ந்த 28,576 நபர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என மாவட்ட நிர்வாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.