நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு சுற்று பகுதியில் பயிரிடப்பட்ட பன்னீர் கரும்புகள் நிவர் புயலால் சேதமடைந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம் உள்ளிட்ட பல பகுதியில் 300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பன்னீர் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.இந்த கரும்புகள் பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் ஜனவரி மாதம் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் வீசிய நிவர் புயலில் பன்னீர் கரும்புகள் அதிகளவு சாய்ந்து சேதமடைந்தது.இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக சாய்ந்த நிலையில் இருந்த பன்னீர் கரும்புகளை நிமிர்ந்து நிக்க வைத்து கரும்புகளை ஒன்றொடு ஒன்று சேர்த்து கட்டும் பணி நடந்து வருகிறது. கரும்புகளை நிமிர்த்தும் போது பல கரும்புகள் உடைந்து வீணாகி வருகிறது.இதனால் விவசாயிகள் பணம் செலவு செய்து கரும்புகளை கட்டு கட்ட ஆட்கள் வேலைக்கு வைத்தும் கரும்புகள் வீணாகி வருவதாக தெரிவித்தனர்.எனவே, சேமடைந்த பன்னீர் கரும்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.