வடவள்ளி:கோவை கோளராம்பதி குளத்தில், குளித்துக்கொண்டிருந்த இரு சகோதரர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.கோவில்மேடு, திலகர் வீதியை சேர்ந்தவர், ஆனந்தன், 25. ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார். இவர், தனது தம்பி ஹரி, 20 மற்றும் நண்பர் மதன், 23 ஆகிய மூவரும், நேற்று விடுமுறை தினம் என்பதால், ஒரே பைக்கில், பொழுதை கழிப்பதற்காக, பேரூர் பகுதிக்கு வந்துள்ளனர்.பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில் குளித்துவிட்டு, பேரூர் -நாகராஜபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் தேங்கியிருந்த நீர், இவர்களின் மீது தெறித்துள்ளது. சேற்று நீரை சுத்தம் செய்ய, கோளராம்பதி குளத்துக்கு சென்றுள்ளனர்.மதன் நீச்சல் தெரியாது என கூறி, குளத்தினுள் இறங்கவில்லை. ஆனந்தன் மற்றும் ஹரி இருவரும், குளத்தில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, இருவரும் சேற்றில் சிக்கி தத்தளித்துள்ளனர். இதனை கண்ட மதன், கூச்சலிட்டு சாலையில் செல்பவர்களை, உதவிக்கு அழைத்துள்ளார்.அவ்வழியாக சென்ற இளைஞர்கள், நீரில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்துள்ளனர். ஒரு வழியாக, ஹரியை மீட்டபோதும், அவர் நீரில் மூழ்கி ஏற்கனவே இறந்திருந்தார்.ஆனந்தன் குளித்த இடம் மிகவும் ஆழமான பகுதி என்பதால், அவரது உடலை மீட்க, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விரைந்து வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினர், ஆனந்தனின் உடலை கண்டெடுத்தனர்.வடவள்ளி போலீசார், சடலங்களை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தந்தை இறந்து, ஓராண்டு ஆவதற்குள், இரு சகோதரர்களும் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.