நரிக்குடி : மாவட்டத்தில் எளியோர் வீடு கட்ட வசதியாக அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் அரசு சிமென்ட் மூடைகள் வழங்கப்பட்டன. இதை 8 மாதமாக வழங்காததால் வீட்டு கனவு வெறும் கானல் நீராக போய் விடுமா என பரிதவிக்கின்றனர்.
எளியோர், நடுத்தர வர்க்கத்தினர் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் சலுகை விலையில் அம்மா சிமென்ட் வழங்கப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அளவில் சிமென்ட் மூடை ரூ.190 க்கு விற்கப்படுகிறது. 100 சதுர அடிக்கு 50 மூடை, அதிகபட்சம் 1500 சதுர அடிக்கு 750 மூடை, வீடு புதுப்பிக்க, பழுது பார்க்க 10 முதல் 100 மூடைகள் வரை சலுகை விலையில் பெறலாம்.
பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு ஒரு மூடை ரூ.220 விலையில் கிடைத்தது. இந்நிலையில் 8 மாதமாக அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் சிமென்ட் கேட்டு பதிவு செய்தோருக்கு சிமென்ட் கிடைக்கவில்லை. இதனால் வீடு கட்டும் கனவு வெறும் கானல் நீராக போய் விடுமோ என கவலையில் உள்ளனர்.
மனசு வையுங்க
பதிவு செய்தோருக்கு கொரோனாவால் சப்ளை இல்லை என தெரிவித்தனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் சிமென்ட் வரவில்லை என தாமதப்படுத்துகின்றனர். இதனால் வீடு கட்ட முடியாமலும், கட்டி பாதியில் முடிக்க முடியாமல் தவிக்கின்றனர். சிமென்ட் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமீம்அன்சாரி, சமூக ஆர்வலர், வீரசோழன்.