தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போகம் நெல் பாசனத்திற்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று தண்ணீர் திறந்துவைத்தார்.
மஞ்சளாறு அணை மொத்த உயரம் 57 அடி. நீர்பிடிப்பில் மழையால் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்திருந்தது. நீர் வரத்து 46 கனஅடி.தண்ணீர் திறப்புதேனி கலெக்டர் பல்லவிபல்தேவ், முதல் போகம் நெல் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். சப்-கலெக்டர் சினேகா, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற் பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் சேகரன் ,அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சையது கான், ஒன்றிய செயலாளர் கள் செல்லமுத்து, அன்னபிரகாஷ், தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன், விவசாயிகள் பங்கேற்றனர்.
நீர் திறப்பு விபரம்
பழைய ஆயக்கட்டுக்கு நேற்று முதல் டிச., 15 வரை17 நாட்களுக்கு வினாடிக்கு 60 கனஅடியும், டிச. 16 முதல் 2021 ஜன.,31 வரை47 நாட்களுக்கு வினாடிக்கு 50 கனஅடியும், பிப். 1 முதல் மார்ச் 15 வரை 43 நாட்களுக்கு வினாடிக்கு45 கனஅடியும் என மொத்தம் 107 நாட்கள், புதிய ஆயக்கட்டுக்கு நேற்று முதல் இன்று வரை (நவ.30) இரு நாட்களுக்கு வினாடிக்கு 40 கனஅடியும், டிச. 1 முதல் 2021 பிப். 28 வரை 90 நாட்களுக்கு 30 கனஅடியும்,மார்ச் 1 முதல் மார்ச் 15 வரை வினாடிக்கு 20 கனஅடியும் மொத்தம் 107 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 3148 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு,நிலக்கோட்டை பகுதிகளில் 2111 ஏக்கர் என மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.