பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூனில் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். 5 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் நீர்திறப்பில் தாமதம் ஏற்பட்டு இரு போக நெல் சாகுபடியை முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
தாமதம்
இந்த ஆண்டு 2 மாதம் தாமதமாக ஆக. 13 ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 137 அடியாக இருந்தது. நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள்இன்னும் ஒரு மாதத்திற்குள் அறுவடை செய்யும் வகையில் உள்ளது. அதற்கு முன்பே இரண்டாம் போக சாகுபடிக்கு நாற்றங்கால் அமைக்க வேண்டும்.
நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.40 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர்பிடிப்பில் மழையில்லை. வடகிழக்கு பருவமழையால் நவம்பரில் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரும். ஆனால் தற்போதுவரை மழை தீவிரமடையாததால் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது.
இரண்டாம் போக சாகுபடிக்கு இது போதுமானதாக இல்லை. பருவமழை தீவிரமடைந்து நீர்மட்டம் 136 அடியைக் கடந்தால் மட்டுமே தண்ணீர் பற்றாக்குறையின்றி முழுமையாக சாகுபடி செய்ய முடியும். அதனால் மழை தீவிரமடையுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.