கொடைக்கானல் : கொடைக்கானல் -- பழநி ரோட்டில் அகற்றப்படாத முட்செடிகளால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு, பழநி முக்கிய வழி தடமாக உள்ளது. பழநியில் இருந்து கொடைக்கானல் 66 கி.மீ தொலைவில் உள்ளது.கோம்பைக்காடு - பெருமாள்மலை இடையே ரோட்டோரம் அடர்ந்து வளர்ந்துள்ள செடிகளால் விபத்து வாய்ப்பு உள்ளது. மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்றாமல் உள்ளதால், ஓட்டுனர்களுக்கு எதிரே வரும் வாகனம் தெரிவதில்லை.
இந்த ரோட்டில் கொண்டை ஊசி வளைவுகள், ஆபத்தான பள்ளங்கள் நிறைய உள்ளன. அவ்வப்போது மேகமூட்டம், பனிமூட்டம் போன்றவற்றாலும் குறுகிய ரோட்டில் வாகனங்கள் இடம் கொடுப்பதில் சிக்கல் உள்ளது. புதர்களை அகற்றாத நிலையில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.இது குறித்து புகார் அளித்தும் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை இல்லை. புதர் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.