திருப்பூர்:ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில், அதிகாரிகள் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை, துணை தாசில்தார், ஆர்.ஐ., உள்ளிட்ட அதிகாரிகளை, தாசில்தார் முரளி, அலுவலகத்தில் அடைத்து வைத்திருப்பதாக, ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு விரைந்த போலீசார், அதிகாரிகள் அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்த பின், கலெக்டர் அலுவலகத்துக்கு தெரிவித்துள்ளனர்.பின், தலைமையிடத்து தாசில்தார் (பொது) ஊத்துக்குளி தாசில்தாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மாலை, 4:00 மணிக்கு பெண் அலுவலர்களையும், தொடர்ந்து நடத்திய பேச்சுக்கு பின், 6:00 மணிக்கு பிற ஊழியர்களையும், அலுவலகத்தில் இருந்து செல்ல அனுமதித்துள்ளார். இச்சம்பவம், அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.அலுவலர்கள் சிலர் கூறுகையில், 'ஞாயிறு விடுமுறையிலும், தாசில்தார் எங்களை பணிக்கு வரவழைத்தார். அடிக்கடி, அலுவலர்களை சிறை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதாக தெரிகிறது,' என்றனர்.கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''இச்சம்பவம் குறித்து, வருவாய் துறை மற்றும் போலீசாரிடம் விளக்கம் கேட்டு, அதற்கேற்ப விசாரணை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.