திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறை, வர்த்தக பாதிப்பில் இருந்து மீண்டெழ துவங்கியிருக்கிறது.
கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்ட காலத்தில், திருப்பூர் ஏற்றுமதி ஆடை உற்பத்தி துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டனர். வெளிநாட்டு வர்த்தகர்கள், 'ஆர்டர்'களை ரத்து செய்ய துவங்கினர்; அனுப்பிய ஆடைக்கான தொகையையும் வழங்காமல், நிறுத்தி வைத்தனர்.ஏ.இ.பி.சி.,யின் கோரிக்கையை ஏற்று, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, 'ஆர்டர்களை ரத்து செய்ய வேண்டாம்' என, வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
வேண்டுகோளை ஏற்ற வர்த்தகர்கள், உற்பத்தி செய்யும் ஆடைகளை தாமதமாக பெற்றுக் கொண்டனர்; நிலுவை தொகையையும் வழங்கி வருகின்றனர். தற்போது, கொரோனா பாதிப்பு விலகி, ஏற்றுமதி ஆடை வர்த்தகம் எழுச்சி பெற துவங்கியிருக்கிறது.''நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடந்த செப்டம்பரில், 12 சதவீதம்; அக்டோபரில் ஏழு சதவீதம் அதிகரித்துள்ளது. ஆடை உற்பத்தியுடன், மருத்துவ ஆடை, முக கவசம் உற்பத்தியும் வளர்ச்சி அடைந்துள்ளது. தினமும், 30 லட்சம் முக கவசம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம், திருப்பூரில் நிறுவப்பட்டுள்ளது,'' என, ஏ.இ.பி.சி., தலைவர்சக்திவேல் கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது;தொடர் கோரிக்கையை அடுத்து, முக கவசம், முழுகவச ஆடை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை அரசு நீக்கியுள்ளது. இதனால், உள்நாடு மட்டுமின்றி, உலகளாவிய நாடுகளுக்கும், முழு கவசம், முழு கவச ஆடைகள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.கொரானாவுக்குப்பின், உலகளாவிய நாடுகளின் பார்வை, இந்தியா பக்கம் திரும்பியுள்ளது; இது, நமது ஏற்றுமதியாளர்களுக்கு சிறந்த வர்த்தக வாய்ப்புகளை பெற்றுத்தரும்.
திருப்பூர் பின்னலாடை துறையினர், செயற்கை இழை ஆடை ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசு, உற்பத்தி சார் சலுகை திட்டத்தை, சமீபத்தில் அறிவித்தது; இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, நாட்டின் செயற்கை இழை ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும்.அரேபியா, ஸ்பெயின், மெக்ஸிகோ என, உலகளாவிய நாட்டு துாதரகங்களுடன் இணைந்து, அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆன்லைனில் ஆடை ஏற்றுமதியாளர், இறக்குமதியாளர் இடையேயான சந்திப்பு கூட்டங்களை நடத்த ஏ.இ.பி.சி., முனைப்பக்காட்டி வருகிறது.
எந்த நாட்டு சந்தையில், எந்த வகை ஆடைகள் அதிகம் இறக்குமதியாகின்றன என்ற விவரம் திரட்டப்பட்டு, அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அரசு, சிறப்பு திட்டங்களை அறிவிக்கும் என நம்புகிறோம். கூட்டு முயற்சி, வெற்றியை பெற்றுத்தரும்.இவ்வாறு, அவர் கூறினார்.''எந்த நாட்டு சந்தையில்,எந்த வகை ஆடைகள் அதிகம்இறக்குமதியாகின்றன என்றவிவரம் திரட்டப்பட்டு, அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது''