திருப்பூர்:தொடர் குற்ற செயல்களை தடுக்க, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.வெளி மாநிலம், பிற மாவட்ட தொழிலாளர்கள் வசிக்கும் திருப்பூரில் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, அடிதடி போன்றவை தொடர் கதையாக நடந்து வருகிறது.இத்தகைய தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும், பழைய குற்றவாளிகளாக தான் உள்ளனர். வழக்கில் சிக்கி, சிறைக்கு செல்லும் அவர்கள், விடுதலையான பின், மீண்டும், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடு கின்றனர்.அவர்களால், சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்க, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் அவர்களை கைது செய்து, சிறையில் அடைக்கின்றனர். சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகள், ஓராண்டுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாது.கடந்த, 2020 ஜன., முதல், நவ., வரையிலான, 11 மாதத்தில், திருப்பூர் மாநகரில், 41 பேர் மற்றும் புறநகர் பகுதியில், 33 பேர் என, 74 பேரை, போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சமீபகாலமாக, இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறியதாவது;குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்லும் நபர், ஜாமீனில் வெளியே வருவதுக்குள் விரைந்து செயல்பட வேண்டும். ஒரு நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, 10 முதல், 15 ஆவணம் பராமரிக்க வேண்டும்.ஆவணங்களை திரட்டுதல், ஜெராக்ஸ் எடுத்தல் உட்பட பணிகளை மேற்கொள்ள, 10 முதல், 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதில், 8,000 ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. ஆனால், காலதாமதமாக வழங்கப்படுவதால், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களே செலவை ஏற்க வேண்டியுள்ளது. செலவின தொகை விரைவாக கிடைக்கும் பட்சத்தில், மேலும் ஆர்வமுடன் போலீசார் பணியாற்ற முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில்,''தொடர் குற்ற செயலில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வது தொடரும். கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட வழக்கின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுவதால், நிதி கிடைக்க தாமதமாகிறது; நிலுவை தொகை, வரும் ஜனவரிக்குள் வழங்கப்பட்டு விடும்,'' என்றார்.