கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதியில், சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி செடிகளில் ஊசி வண்டு தாக்கம் மற்றும் மழை காரணமாக, தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த வாரம் 'நிவர்' புயல் மழை தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால், மேக மூட்டமாக காணப்பட்டதாலும், பனி பொழிவு துவங்கியதாலும், தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தக்காளி பழங்களை ஊசி வண்டு தாக்குவதால் அழுகி வருகிறது.செடிகளில் இருந்து தக்காளியை பறித்து, தினசரி மார்க்கெட் கொண்டு சென்றால், கட்டுபடியான விலைக்கு எடுப்பதில்லை. இதனால், சொலவம்பாளையம், லட்சுமி நகர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி செடியில், ஊசி வண்டு தாக்கம் காரணமாக செடியில் இருந்து தக்காளி பறிக்காமல் விடப்பட்டுள்ளது.நேற்று, தினசரி மார்க்கெட்டில், 14 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டி ஒன்று அதிகபட்சமாக 240 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.இதுகுறித்து, விவசாயி சக்தி கூறியதாவது:மேகதுாது ைஹபிரட் ரக தக்காளி ரகம், கடந்த ஆடி மாதம் சாகுபடி செய்யப்பட்டது. தக்காளி செடி காய்ப்புக்கு வந்து இரண்டு மாதங்களாகிறது.தற்போது, மழை மற்றும் ஊசி வண்டு தாக்குதல் காரணமாக, தக்காளி பழம் அழுகி வருவதால், பறிக்காமல் செடியிலேயே விடப்பட்டுள்ளது. இதனை பறித்து சென்றால் கூலிக்கு கூட வருமானம் கிடைப்பதில்லை. இவ்வாறு, தெரிவித்தார்.