உடுமலை:நான்கு வழிச்சாலை திட்டத்தின் கீழ், பாலம் கட்ட, உடுமலை ராஜவாய்க்கால் பள்ளத்தில், துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியிலிருந்து, உடுமலை வழியாக, திண்டுக்கல் கமலாபுரம் வரையில், 131.96 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதில், உடுமலை பகுதியிலுள்ள, ஆறு உட்பட நீராதாரங்களின் குறுக்கே, பாலங்கள் கட்டும் பணி துவங்குகிறது. நகர எல்லையிலுள்ள, ராஜவாய்க்கால் பள்ளம் வழியாக, நான்கு வழிச்சாலை செல்கிறது. எனவே, ஏரிப்பாளையம் பாலம் தாண்டி, செஞ்சேரிமலை ரோட்டில், பள்ளத்தின் குறுக்கே, புதிய பாலம் கட்ட பணிகள் துவங்கியுள்ளது.இதற்காக, பள்ளத்தின் கரைகள் துார்வாரப்பட்டு, தண்ணீர் தடையில்லாமல், அப்பகுதியை கடந்து செல்ல பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பள்ளத்தில், உடுமலை நகரின் கழிவு நீர், கலந்து, மழைக்காலத்தில், வெள்ளமாக அந்நீர் செல்வதால், பாலம் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.சாக்கடை கழிவு நீர் இப்பள்ளத்தில், கலப்பது தவிர்க்கப்பட்டால் மட்டுமே, கட்டுமான பணிகளை பாதிப்பில்லாமல், மேற்கொள்ள முடியும். இதே போல், பிற மழை நீர் ஓடைகளின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி, தீவிரமடைந்துள்ளது.பாலம் கட்டும் போது, மழை நீர் ஓடை, பி.ஏ.பி., வாய்க்கால்களின் மடை, கண்காணிப்பு மற்றும் இயல்பான வழித்தடம் பாதிக்காமல், திட்ட வரைவு தயாரித்து செயல்படுத்த அப்பகுதி விவசாயிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.