கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சென்றாம்பாளையம் பிரிவு, எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன், 45, குடும்பத்தினருடன் நேற்று மாலை, 3:00 மணியளவில் தொகுப்பு வீட்டின் உள்ளே 'டிவி' பார்த்து கொண்டிருந்தனர்.தொகுப்பு வீடு பராமரிப்பு இல்லாததால், மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் இருந்தது. இந்நிலையில், மழை பெய்த போது, அவர்கள் வீட்டிற்கு வெளியே வந்தனர். அப்போது, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மேற்கூரை இடிந்து விழும் நேரத்தில் வீட்டினுள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து, தகவல் அறிந்த தலைமையிடத்து துணை தாசில்தார் சிவக்குமார், நில வருவாய் அலுவலர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் வினு, நல்லட்டிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் தென்னரசு, ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.வருவாய்துறை சார்பில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நிவாரணமாக, அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.மேலும், இடிந்த வீட்டிற்கு நிதி உதவி ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கு, ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஒப்படைக்க வேண்டும் என, வருவாய்துறையினர் அறிவுறுத்தினர்.மேலும், ஊராட்சி சார்பில் மேற்கூரை பழுது பார்ப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதற்கு, பட்டா, ஆதார் கார்டு, வங்கி சேமிப்பு புத்தகம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.இப்பகுதியில், மொத்தம், 32 வீடுகள் உள்ளன. இதில் மூன்று வீடுகள் இடித்து பசுமை வீடு கட்டப்பட்டுள்ளது. ஆறு வீடுகளுக்கு மேற்கூரை சீரமைக்க விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது என ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.