உடுமலை:குறிச்சிக்கோட்டை, அங்கன்வாடி மையத்தில் 'குடி'மகன்களின் அட்டகாசம் எல்லை மீறுவதால், பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.உடுமலை ஒன்றியம் குறிச்சிக்கோட்டை ஊராட்சியில், நுாலகத்தின் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. மையத்தில், பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். மையத்தின் பின்புறம், ஓடை அமைந்துள்ளது.ஓடையில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதும், செடிகள் புதராக வளர்ந்திருப்பதாலும், மையத்தில் கொசுத்தொல்லை தீராத பிரச்னையாக இருக்கிறது. மாலை நேரத்தில், மையத்தின் அருகில் குடிமகன்கள் இளைப்பாறுவதும், மது அருந்துவிட்டு, 'பாட்டில்களை' வீசி செல்கின்றனர்.குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடத்தில் மையத்தை மாற்றி அமைப்பதற்கு, சமூக நலத்துறையும், ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 'குடிமகன்களின்' அட்டகாசத்தால், அப்பகுதி மக்களும் நிம்மதி இழந்துள்ளனர். பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றும், இப்பிரச்னையை கண்டும் காணாமல் இருப்பதாகவும், மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.