மேட்டுப்பாளையம்:கடந்தாண்டு மேட்டுப்பாளையத்தில், சுவர் இடிந்து விழுந்து, 17 பேர் இறந்த இடத்தில் புதிதாக கட்டிய சுற்றுச்சுவற்றை அகற்றக் கோரி, சில அமைப்புகள் ஊர்வலம் நடத்த உள்ளதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூர், கண்ணப்பன் லே-அவுட்டில், சிவசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான, வீட்டின் சுற்றுச்சுவர் கடந்த ஆண்டு டிச., 2ல் இடிந்து விழுந்தது. அருகில் இருந்த நான்கு வீடுகள் மீது, சுவர் விழுந்ததால், 17 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.சில மாதங்களுக்கு முன், இடத்தின் உரிமையாளர், நகராட்சியின் அனுமதி பெற்று, மீண்டும் அதே இடத்தில் சுற்றுச்சுவர் கட்டியுள்ளார்.இந்நிலையில், 17 பேர் இறந்த நாளை தீண்டாமை எதிர்ப்பு நாளாக அனுஷ்டிக்க சில அமைப்புகள் முடிவு செய்துள்ளன. புதிதாக கட்டிய சுவற்றை அகற்ற கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வலியுறுத்தியும், ஊர்வலம் நடத்தப்போவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.இதையடுத்து, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, கோவை ரூரல் எஸ்.பி., அருளரசு, டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், அப்பகுதியை ஆய்வு செய்தனர். சுவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க, போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.