கும்மிடிப்பூண்டி : ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர், நேற்று, சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கவரைப்பேட்டை அடுத்த, பெருவாயல் கிராமத்தில் வசித்தவர் சொக்கலிங்கம் மகன் ராஜாமணி, 18. கடந்த, 27ம் தேதி, காலை, பெருவாயல் கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்று பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தபடி, நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமானார்.கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், இரு தினங்களாக ராஜாமணியை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, குதித்த இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில், ஆற்றில் உள்ள புதர் ஒன்றில், ராஜாமணியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.அவரது உடலை, தீயணைப்பு துறையினர் மீட்டனர். கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.