புதுச்சேரி : புதுச்சேரியில் தலைமை செயலக அதிகாரியை கத்தியால் வெட்டிவிட்டு, அவரது மனைவியின் கழுத்தில் இருந்த 15 சவரன் நகைகளை பறித்து சென்ற கொள்ளையர்கள் மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை, தில்லை கண்ணம்மாள் நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 56; உழவர்கரை சப்ரிஜிஸ்டராக பணியாற்றுபவர். தற்போது, தலைமை செயலக அதிகாரியாக உள்ளார். இவர், நேற்று முன்தினம் மாலை தனது மனைவி லதாவுடன் வெளியில் சென்று விட்டு இரவு 8:45 மணிக்கு வீட்டிற்கு பைக்கில் வந்தார்.ரவிச்சந்திரன் பைக்கை நிறுத்திவிட்டு, வீட்டின் கேட்டை திறக்க சென்றார். அப்போது, பைக்கில் வந்த மூன்று நபர்கள், லதா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர்.
அதனைக் கண்ட ரவிச்சந்திரன் தடுக்க ஓடி வந்தார். அப்போது, கொள்ளையர்கள் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். அதனை பொருட்படுத்தாமல் தடுக்க முயன்ற ரவிச்சந்திரனின் இடது கையை கொள்ளையர்கள் கத்தியால் வெட்டினர். அதேநேரத்தில், லதா கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்க செயின் மற்றும் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.படுகாயமடைந்த ரவிச்சந்திரன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, செயின் பறிப்பு கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தொடரும் செயின் பறிப்புலாஸ்பேட்டையில் சில தினங்களுக்கு முன் தாகூர் நகரில் வீட்டு வாசலில் நின்றிருந்த பெண் மற்றும் கருவடிக்குப்பத்தில் டைலர் கடையில் இருந்த பெண்ணன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 12 சவரன் நகைகளை பறித்து சென்றனர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதற்குள் நேற்று முன்தினம், அரசு அதிகாரி மனைவியிடம் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.