புதுச்சேரி : சண்டே மார்க்கெட்டில், கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக, காந்தி வீதியில் இயங்கி வரும் சண்டே மார்க்கெட் மூடப்பட்டது.மத்திய அரசின் தளர்வுக்கு பிறகு, வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டது. ஆனால், சண்டே மார்க்கெட் திறக்க அனுமதி அளிக்கவில்லை.தடையை மீறி சண்டே மார்க்கெட் இயங்கி வருகிறது.இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதரத்துறை வலியுறுத்தி உள்ளது.அதன்படி, நகர சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தின் மருத்துவ குழுவினர், நேற்று சண்டே மார்க்கெட்டில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
சண்டே மார்க்கெட் கடைக்கு வந்த பொதுமக்களை அழைத்து, கொரோனா ஆண்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.பரிசோதனை செய்ய பலர் விருப்பம் தெரிவிக்காததால், நேரு வீதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கடைகளுக்கு வந்த பொதுமக்களை அழைத்து பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தினர். அதன்பேரில் சிலர் பரிசோதனை செய்து கொண்டனர்.