புதுச்சேரி, : பழைய வாக்காளர் அட்டையை திரும்ப பெறாமல் புதிய வாக்காளர் அட்டை வழங்க வேண்டும் என நைனார்மண்டபம் மக்கள் நல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து இயக்க தலைவர் சத்தியராஜ் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் துறை அதிகாரிகளை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி சட்டசபை தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்களின் பழைய வாக்காளர் புகைப்பட அட்டை பெற்றுக்கொண்டு புதிய வாக்காளர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், வருவாய் துறை மூலம் குடியுரிமை, ஜாதி சான்றிதழ்கள், இதர சான்றிதழ்கள் பெறும்போது, புதுச்சேரியில் 2001ம் ஆண்டு முதல் குடியிருந்தது, குடி பெயர்ந்தற்கான ஆதாரம் கேட்கின்றனர். அதற்காக தேர்தல் துறை மூலம் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதாரமாக அளிக்கின்றனர்.
தற்சமயம் தேர்தல் துறையினர் பழைய வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப பெற்றுக்கொள்வதால், வருவாய் துறையினர் கேட்கும் ஆதாரத்தை வழங்க இயலாததால் சான்றிதழ்கள் மறுக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.எனவே பழைய வாக்காளர் அட்டையை திரும்ப பெறாமல் புதிய வாக்காளர் அட்டை வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.