புதுச்சேரி : புயலால் பாதித்த பயிர்களை காலம் கடத்தாமல் அரசு கணக்கீடு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என புதுச்சேரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்க தலைவர் கீதநாதன் விடுத்துள்ள அறிக்கை சமீபத்தில் பெய்த தொடர் மழை மற்றும் நிவர் புயலாலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் விவசாயிகள் விளைவித்த பயிர்கள் பெருத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.குறிப்பாக நெல், கரும்பு, வாழை, மரவள்ளி, சவுக்கை போன்ற பயிர்கள் நாசமாகியுள்ளது. பாகூர் தாலுகாவில் மட்டும் 600 ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.கரும்பு, மரவள்ளி, வாழை, சவுக்கை அடியோடு சாய்ந்து பெருத்த பாதிப்பினை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
பாதிப்படைந்த பயிர்களை வேளாண் மற்றும் வருவாய் அதிகாரிகள் கணக்கீடு செய்து, நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரமும், பிற பயிர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். கால்நடைகளும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. இதனையும் அரசு கணக்கீட்டு பாதிக்கப்பட்ட கால்நடை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.