பாகூர் : ஆன்லைனில் விளையாடிய சிறுவர்களை போலீசார் அறிவுரைகள் கூறி, வாலிபால் விளையாட வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டை பெற்று வருகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், வீட்டிலிருந்த பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவது அதிகரித்தது.இதனால், தங்களுடைய வழக்கமான படிப்பு, வேலை உள்ளிட்டவற்றில் சரிவர ஈடுபட முடியாமல் கவனச்சிதறல், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகி விடுகின்றனர். இதனால், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று பாகூர் அடுத்த குருவிநத்தம் கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மொபைல் போனில், ஆன்லைன் கேம் விளையாடுவதாக, பாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், அருள்மணி, உதவி சப் இன்ஸ்பெக்டர் சவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு மொபைல் போனில், ஆன்லைன் கேம் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து பேசினர்.அப்போது, ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து போலீசார் விளக்கமளித்தனர்.
மேலும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒதுக்கி வைத்து விட்டு, நேரடியாக மைதானத்தில் இறங்கி விளையாடினால், உடலும், மனமும் வலுப் பெறும். இதனால், எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாகலாம் என அறிவுரை கூறினர்.பின்னர் அந்த சிறுவர்களை இரு அணிகளாக பிரித்து, அவர்களுக்கு, வாலிபால் விளையாடுவது குறித்து பயிற்சி அளித்தனர். போலீசாரின் இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று மாலைமுதல் வைரலாகி வருகிறது. ஆன்லைன் கேமில் மூழ்கி கிடக்கும் பிள்ளைகளை மீட்க முடியாமல், தவித்த பெற்றோர்கள், இந்த சமூக வலைதள பதிவை பார்த்து பாராட்டி வருகின்றனர்.