சோழவரம் : பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கொற்றலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், பலவீனமாக உள்ள கரைகளில், மணல் மூட்டைகள் போட்டு அடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
கடந்த, 2015ல் கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, சோழவரம் பகுதியில் உள்ள நெற்குன்றம், செக்கஞ்சசேரி, புதுகுப்பம், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கரைகள் உடைந்தன.மழை நீர் கிராமங்களை சூழ்ந்து, மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். விளை நிலங்களும் மழை நீரில் மூழ்கி வீணாயின. அதன் பின், ஐந்து ஆண்டுகளாக கொற்றலை ஆற்றில் பெரிய அளவில் நீர்வரத்து இல்லை.இந்நிலையில், கடந்த, 23ம் தேதி முதல், பெய்து வரும் தொடர் மழையில், கொற்றலை ஆற்றில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் அதிகரித்து உள்ளது.
நீர்த்தேக்கத்தில் இருந்து, நேற்று முன்தினம், முதல், உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வினாடிக்கு, 1000 கன அடியில் துவங்கி, படிப்படியாக, உயர்த்தி, நேற்றைய நிலவரப்படி, 6,000 கன அடி வெளியேற்றப்பட்டதால், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.வெள்ள அபாயம் இருக்கும் சூழலில், பலவீனமாக உள்ள கரைகள் கண்டறியப்பட்டு, அங்கு மணல் மூட்டைகள் போடும் பணிகள் நடைபெறுகின்றன. 2015ல் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை, அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.