புதுச்சேரி : மாநிலத்தில் 6 மாதங்களாக அமலில் இருந்த மதுபானங்களுக்கு கொரோனா வரி ரத்தாகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட மதுக்கடைகள் மே மாதம் 25ம் தேதி திறக்கப்பட்டது.அப்போது தமிழக குடிமகன்கள் வருகையை தடுக்க தமிழகத்திற்கு இணையாக கொரோனா வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி தமிழக மதுபானங்களுக்கு நிகராக புதுச்சேரி மதுபானங்களின் விலை இருக்கும்படி கொரோனா வரி ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு விதிக்கப்பட்டது.இந்த விலை உயர்வு புதுச்சேரி மதுபிரியர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வரிவிதிப்பு செப்டம்பர் முதல் மேலும் மூன்று மாதங்களுக்க நீட்டிக்கப்பட்டது.
இந்த கொரோனா வரி இன்று 30ம் தேதி நிறைவடைகிறது.இதற்கிடையில் மதுபான கடை உரிமையாளர்கள் நேற்று முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நவச்சிவாயத்தை சந்தித்து பேசினர். அப்போது கொரோனா வரி விதித்து தமிழகத்திற்கு இணையாக புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விலை உயர்த்தப்பட்டதால் வியாபாரம் பெருமளவு சரிந்துவிட்டது. தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் கொரோனா வரியை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக ஏற்கனவே இருந்தப்படியே எம்.ஆர்.பி.,விலையில் 10 முதல் 15 சதவீதம் வரை வரியை உயர்த்தலாம் என கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நவச்சிவாயம் ஆகியோர் தலைமை செயலர் அஸ்வனிகுமார், அரசு செயலர் சுர்பீர் சிங்கியிடம் ஆலோசனை நடத்திய பின், கடந்த 6 மாதங்களாக அமலில் இருந்த மதுபானங்களுக்கு கொரோனா வரி ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக 15 சதவீதம் வரை விலையை உயர்த்துவதற்கான கோப்பு கவர்னருக்கு அனுப்பப் பட்டுள்ளது. புதுச்சேரியில் 920 வகையான மது வகைகள் உள்ளது. இதில் 154 வகையான மது வகைகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த மதுபானங்களுக்கு தமிழகத்திற்கு இணையாக 300 சதவீதம் வரை விலை உயர்த்தப் பட்டுள்ளது.தமிழகத்தில் விற்பனை செய்யப்படாத மது வகைகளுக்கு விற்பனை விலையில் இருந்து 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து விற்பனை செய்யப்படுவது குறிப்பிடதக்கது.