திருத்தணி : 'திருவள்ளூர் மாவட்டத்தில் செல்லும், கொற்றலை, ஆரணி ஆறுகள் குறுக்கே, 10 உயர்மட்ட பாலம் கட்டப்படும்' என, அமைச்சர் பெஞ்சமின், திருத்தணியில் தெரிவித்தார்.
'நிவர்' புயல் காரணமாக, ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால், கொற்றலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருவள்ளூர் மாவட்டம், சாமந்தவாடா, சங்கீதா குப்பம், சாணாகுப்பம், என்.என்.கண்டிகை மற்றும் முத்துக் கொண்டாபுரம் ஆகிய இடங்களில் உள்ள தரைப்பாலங்கள் மீது வெள்ளம் ஓடியது.இதில், என்.என்.கண்டிகை, முத்துக்கொண்டாபுரம் தரைப்பாலம் வெள்ளத்தால் சேதம் அடைந்தது. இதனால், இரு பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தமிழக அமைச்சர் பெஞ்சமின், கலெக்டர் பொன்னையா, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், முன்னாள் எம்.பி., அரி, முன்னாள் அமைச்சர், ரமணா, வருவாய் கோட்டாட்சியர் சத்யா உட்பட அரசு அதிகாரிகள் நேரில் சென்று, தரைப் பாலங்களை பார்வையிட்டனர்.என்.என்.கண்டிகை தரைப்பாலத்தை பார்வையிட்ட பின், அமைச்சர் பெஞ்சமின் கூறியதாவது:'நிவர்' புயலால் முன்னெச்சரிக்கையாக மாவட்டத்தில், சிறப்பு முகாம் அமைத்து, 18 ஆயிரம் பேர் தங்க வைத்துள்ளனர். மேலும், மாவட்டத்தில், 181 வீடுகள் சேதமடைந்துள்ளது. ஆடு மாடுகள் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
மாவட்டத்தில், ஆரணி ஆற்றில், நான்கு தரைப்பாலம், கொற்றலை ஆற்றில், ஆறு தரைப்பாலம் என, மொத்தம், 10 பாலங்கள் உள்ளன இந்த பாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பாலங்கள் சேதம் அடைந்துள்ளன.இதற்கு பதிலாக, 10 உயர்மட்ட பாலம் விரைவில் அமைக்கப்படும். ஆரணி ஆற்றில், மூன்று புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.மழை நீரை சேமிக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.