விருத்தாசலம் : விருத்தாசலத்தில் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் 200க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. இங்கு, விருத்தாசலத்தை சேர்ந்த சரவணன் 47, கோட்டேரியை சேர்ந்த ராஜேந்திரன்,66, ஆகியோர் செராமிக் கம்பெனி நடத்தி வருகின்றனர்.இவற்றில், அகல் விளக்குகள், பீங்கான் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.நேற்று இரவு 9:30 மணியளவில், இருவரது செராமிக் கம்பெனிகளும் தீப்பிடித்து எரிந்தன.
தகலறிந்து வந்த விருத்தாசலம், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மணி, சண்முகம் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் செராமிக் கம்பெனியில் இருந்த உற்பத்திப் பொருட்கள், அகல் விளக்குகள், மூலப் பொருட்கள் உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. தீ விபத்திற்கான காரணம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.