பண்ருட்டி : பண்ருட்டி அருகே அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்களை அறையில் வைத்து, 'சீல்' வைத்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகிசந்திரன், 60; அ.தி.மு.க., பிரமுகர். ரைஸ்மில் வைத்துள்ளார். இவர் அதிகளவில் சொத்து குவித்து வைத்துள்ளதாக கூறப் படுகிறது.இவரது வீட்டில் கடந்த 27ம் தேதி இரவு 10:30 மணி முதல் வருமான வரித் துறையினர் சோதனையை துவக்கினர். நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணி வரை சோதனை நடந்தது.
சுகிசந்திரன், அவரது மனைவி ராஜேஸ்வரியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.தொடர்ந்து, சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை, அதே வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து, 'சீல்' வைத்து சென்றனர்.கைப்பற்றப்பட்ட சொத்து விபரங்கள், ஆவணங்கள் குறித்து வருமான வரி துறையினர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.