காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வடவாற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம், ஓமக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி; கூலித்தொழிலாளி. இவரது மகன் ஹரிகணேஷ், 14; ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.கொரோனா பரவல் காரணமாக பள்ளி விடுமுறை என்பதால், ஹரிகணேஷ் கடந்த ஆறு மாதமாக காட்டுமன்னார்கோவில் அடுத்த பாப்பான்தோப்பில் உள்ள பெரியம்மா ஜெயா வீட்டில் தங்கி இருந்தார். இவர், நேற்று மாலை நண்பர்களுடன் காட்டுமன்னார்கோவில் பாலம் அருகில் வடவாற்றில் குளித்தார்.
அப்போது ஹரி கணேஷ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வந்து தேடியும் கிடைக்கவில்லை. தகவல் அறிந்து வந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு படை வீரர்கள், வடவாற்றில் இறங்கி தேடி, சடலமாக மீட்டனர். காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.