தாம்பரம் : வேலைக்கு வந்த இளம்பெண்ணை, அடைத்து வைத்து மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற, டாக்டர் உட்பட இருவரை, தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடுத்த தாம்பரம், சி.டி.ஓ., காலனியைச் சேர்ந்தவர், தீபக், 28. இவர், கிரீம்ஸ் சாலையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.இவரது வீட்டில், முடிச்சூர், லட்சுமி நகர், முதல் தெருவைச் சேர்ந்த, 27 வயது இளம்பெண், வீட்டு வேலை செய்து வந்தார்.இந்நிலையில், அப்பெண் தன் வீட்டில் இருந்து, வெள்ளி பொருட்கள் திருடியதாக, நேற்று முன்தினம் இரவு, தீபக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, புகார் அளித்தார். புகாரின்படி, தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார், பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
அப்போது, போலீசாரிடம் அவர் கூறியதாவது:நான், தீபக்கின் வீட்டில் பணிபுரிந்த போது, என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால், நான் இம்மாதம், 18ம் தேதி முதல், பணியில் இருந்து நின்றுவிட்டேன். நேற்று முன்தினம், தீபக் வீட்டிற்கு, நான் ஏற்கனவே பணிபுரிந்த, 18 நாட்களுக்கான, சம்பளத்தை வாங்க சென்றேன்.அப்போது, தீபக்கும் அவரது உறவினர் ஆனந்த் அமிர்தராஜ் என்பவரும் சேர்ந்து, என்னை நான்கு மணி நேரம், வீட்டில் அடைத்து வைத்து மிரட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், பாலியல் பலாத்காரம் செய்யவும் முயன்றனர்.
அவர்களது, ஆசைக்கு நான் இணங்க மறுத்ததால், என் மீது திருட்டு, புகார் கொடுத்தனர். இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்து, இளம்பெண்ணிடம் புகாரை பெற்ற போலீசார், தீபக் மற்றும் ஆனந்த் அமிர்தராஜ் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.