சென்னை : சென்னையில், கனமழையை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளில், நெடுஞ்சாலைத் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சென்னையில் அண்ணாசாலை - பூந்தமல்லி நெடுஞ்சாலை, ௧,௦௦௦ அடி சாலை, ஜி.என்.டி., சாலை, ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட, 220 கி.மீ.,ருக்கு மேற்பட்ட சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. இச்சாலைகள், பல்வேறு இடங்களில் நீர்வழித்தடங்களை கடந்து செல்கிறது. இங்கு மேம்பாலங்கள், தரைப்பாலங்கள், கீழ்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மழைநீரை எளிதாக வெளியேற்றும் வகையில், சாலைகளின் இரண்டு புறங்களிலும், வெள்ளநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.
சமீபத்திய, 'நிவர்' புயலால் ஏற்பட இருந்த சேதங்களை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், அரசு தவிர்த்தது. இதனால், சென்னையில் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், டிச., 2 முதல் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.எனவே, அடுத்தடுத்த புயல்களையும், மழையையும் எதிர்கொள்வதற்கு, நெடுஞ்சாலைத்துறைக்கு முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, பள்ளிக்கரணை சதுப்பு நில கால்வாய், மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் சிறுபாலம், அண்ணாசாலையில் வெற்றி தியேட்டர் வடிகால், ஜி.பி., சாலை மற்றும் பட்டுல்லாஸ் சாலை வடிகால்.மேலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகேயுள்ள வடிகால், நுாறடிச் சாலையில் கொரட்டூர் உபரிநீர் கால்வாய், கொளத்துார் உபரிநீர் கால்வாய் உள்ளிட்ட, பல்வேறு இடங்களில், மழை முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சாந்தி, கண்காணிப்பு பொறியாளர் இளங்கோ, கோட்ட பொறியாளர் சரவணசெல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், இப்பணிகளை, நேற்று ஆய்வு செய்தனர்.